×

4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளில் 272 பதவிகளுக்கு 1,242 பேர் போட்டி தேர்தல் களம் சூடுபிடித்தது இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திருவண்ணாமலை, பிப்.8: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்தமுள்ள 272 பதவியிடங்களுக்கு 1214 பேர் போட்டியிடுகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. அதன்படி, திருவண்ணாமலை, செய்யாறு, வந்தவாசி, ஆரணி ஆகிய 4 நகராட்சிகளில் உள்ள 123 வார்டுகளுக்கும், செங்கம், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் போளூர், கண்ணமங்கலம், களம்பூர், சேத்துப்பட்டு, தேசூர், பெரணமல்லூர் ஆகிய 10 பேரூராட்சிகளில் உள்ள 150 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

அதையொட்டி, கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி, கடந்த 4ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. பின்னர், கடந்த 5ம் தேதி பரிசீலனை நடந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று மாலை 3 மணிவரை மனுக்களை வாபஸ் பெற வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, நேற்று மாவட்டம் முழுவதும் 347 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். அதைத்தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, நேற்று மாலை 5 மணியளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வார்டு வாரியாக வெளியிடப்பட்டது.

இந்நிலையில், திருவண்ணாமாலை மாவட்டத்தில், உள்ள 4 நகராட்சிகளில் 843 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில், 28 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், 164 பேர் வேட்புமனுக்களை நேற்று வாபஸ் பெற்றனர். எனவே, தற்போது, நகராட்சி வார்டு கவன்சிலர் தேர்தலில் 651 பேர் களத்தில் உள்ளனர். அதேபோல், மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில் 752 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில், 5 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், 183 பேர் நேற்று வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.

போளூரில் வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் 5வது வார்டில் அதிமுக சார்பில் மனுதாக்கல் செய்திருந்த 2 பேரும் தங்களுடைய மனுக்களை வாபஸ் பெற்றதால், திமுகவைச் சேர்ந்த உமாமகேஸ்வரிபாபு என்பவர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். எனவே, மாவட்டம் முழுவதும் பேரூராட்சிகளில் தற்போது 563 பேர் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. மேலும், வரும் 17ம் தேதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. எனவே, வாக்கு சேகரிக்கவும், தேர்தல் பிரசாரம் செய்யவும் அதிகபட்சம் 8 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் தங்களுடைய வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். எனவே, தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.

Tags :
× RELATED தட்டிக்கேட்ட கம்யூனிஸ்ட் நிர்வாகி...